Sri Ramakrishna Tapovanam

 

Image

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்

 

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி

அகத்திலே அன்பினோர் வெள்ளம்

பொறிகளின் மீது தனியரசாணை

பொழுதெலாம் நினது பேரருளின்

நெறியிலே நாட்டம் கருமயோகத்தில்

நிலைத்திடல் என்றிவையருளாய்

குறிகுணமேதும் இல்லதாய் அனைத்தாய்

குலவிடு தனிப்பரம் பொருளே!

 

-மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

 

வசதிமிக்க குடும்பத்தில் பிறந்தும்கூட, புத்தரைப்போல துறவறத்தை ஏற்றுக்கொண்ட மாமனிதர் சுவாமி சித்பவானந்தர். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் அணுக்கச் சீடரான மகாபுருஷ மகராஜ் என வழங்கப்படும் சுவாமி சிவானந்தர் இவரது குருநாதர் ஆவார். சின்னு என வழங்கப்பட்டவரை சித்பவானந்தர் ஆக்கிய பெருமை இவருக்கு உண்டு. ஊட்டியில் இருந்த சுவாமிகள் தம் குருநாதரின் விருப்பப்படி திருப்பராய்த்துறைக்கு கால்நடையாகவே வந்து, தவம் செய்து, ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் அமைத்து, கல்விப்பணி - ஆன்மிகப்பணி இரண்டையும் சிறப்புறச் செய்தார். இவருக்கு 50க்கும் மேற்பட்ட துறவிகளும், பிரம்மச்சாரிகளும், ஆயிரக்கணக்கான அன்பர்களும், மாணவ மாணவிகளும் சீடர்களாயினர்.

 

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் ஆன்மீக - சமுதாயப் பணிகள்

 

  1. சுவாமி சித்பவானந்தரின் அரிய கண்டுபிடிப்பு அந்தர்யோகம் ஆகும். ஒவ்வொரு இடத்திலும் வருடத்திற்கு நான்கு முறை தமிழ் நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் ஒரு நாள் அந்தர்யோகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தவிர தபோவனத்தில் ஆண்டுக்கு மூன்று முறை மூன்று நாட்கள் செப்டம்பரில் சக்தி பூஜை சிறப்பு அந்தர்யோகமும், டிசம்பரில் சாரதா தேவியார் ஜெயந்தி சிறப்பு அந்தர்யோகமும், பிப்ரவரியில் ஸ்ரீ ராமகிருஷ்ண ஜெயந்தி சிறப்பு அந்தர்யோகமும் நடந்து வருகின்றன. மேலும் சிறப்பு அந்தர்யோகங்கள் தபோவன கிளை ஆஸ்ரமங்கள் சேரன்மகாதேவி, திருவேடகம், மதுரை சமிதி, ராமநாதபுரம், திருநெல்வேலி, சேலம், பண்ணைக்காடு மற்றும் பாபநாசம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. பெருந்திரளான அன்பர்கள் பங்கேற்று பயனடைகிறார்கள். குற்றாலத்தில் ஜூன் 15 முதல் ஆகஸ்டு 15 வரை இரண்டு மாதங்கள்  பருவ அந்தர்யோகம் நடந்து வருகிறது.

  2. இராமநாதபுரம் ஸ்ரீ தாயுமானவ சுவாமி தபோவனத்தில் தாயுமானவர் குருபூஜை, அன்னதானம், அந்தர்யோகம் தொடர்ந்து ஆண்டு தோறும் நிகழ்ந்து வருகிறது.

  3. ஒவ்வொரு நவம்பர் மாதமும் பழநியில் கந்தர் அனுபூதி பாராயணமும், ஐக்கிய வணக்கமும், மகேஸ்வர பூஜையும் நிகழ்ந்து வருகிறது.

  4. ஆண்டுக்கு ஒரு மாவட்டத்தில் தபோவன் சுவாமிஜியும் அன்பர்களும் பங்குபெறும் மூன்று நாள் பாதயாத்திரை தொடர்ந்து 40 ஆண்டுகளாக நடந்து  வருகிறது. பாதயாத்திரை செல்லும் இடங்களில் சமய நூல்கள், புதிய வஸ்திரங்கள் தானமாக  வழங்கப்படுகிறது.

  5. 1947 ஆம் ஆண்டுமுதல் கார்த்திகை தீபத்தின்போது சுவாமிஜி தலைமையில் அன்பர்கள் திருவண்ணாமலை கிரிவலம் செய்து வருகிறார்கள்.

  6. இராமேஸ்வரத்தில் ஆண்டுதோறும் ஸ்ரீ ராமநவமி விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

  7. எல்லா ஆசிரமங்களிலும் குருதேவர், அன்னையார், விவேகானந்தர் ஜெயந்தி விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

  8. தபோவனத்தின் வழிகாட்டுதலின் பேரில் விவேகானந்த இளைஞர் மன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  9. இளைஞர்களை  ஆன்மீகத்திற்கு தயார் செய்ய பண்பாட்டுப் பயிற்சி முகாம்கள் தபோவனத்திலும் கிளைகளிலும் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. 

  10. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்காக பண்பாட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பெறுகின்றன.\

  11. படிக்க வசதியில்லாத, கல்வியில் சிறந்த மாணவ மாணவியர்க்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. பெண்கள் கல்வி உதவித் திட்டம் மூலம் ஆண்டுக்கும 40 பெண்கள் பயன்பெறுகிறார்கள்.

  12. தபோவன நிர்வாகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரியிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 60,000 பேர் கல்வி பெற்று பயன் அடைகிறார்கள்.

  13. சேரன்மகாதேவியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சுமார் 100 பேர் பயன்பெறுகிறார்கள்.

  14. 1952 முதல் விளம்பரமே இல்லாமல் மிகக் குறைந்த விலையில் வெளிவரும் ஆன்மீக மாத இதழ் தர்மசக்கரம் ஆகும்.

  15. தபோவனத்தில் 100க்கும் மேற்பட்ட வெளியீடுகள் அனைத்துமே சமய பிரச்சார நோக்கோடு குறைந்த விலைக்கே வெளியிடப்படுகிறது.

  16. ஒவ்வொரு ஆண்டும் EYE CAMP நடத்தப்பட்டு பொதுமக்களில் குறைந்தது 60 பேருக்கு கண்புரை அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்து தரப்படுகிறது.

  17. திருப்பராய்த்துறை மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள பகுதி மக்களுக்கு Dr. V.கனகராஜ் அவர்கள் மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  18. திருநெல்வேலி சாரதா சமிதியில் சுவாமி சித்பவானந்தரின் நூற்றாண்டு விழா நினைவு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

  19. திருப்பராய்த்துறையில் 1977-இல் வெள்ளம் கரைபுரண்டு ஓடியபோது சுற்றிலும் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் சுமார் ஒரு மாதத்திற்கு சுவாமிஜி உணவளித்தார். திருநெல்வேலியில் 1992-இல் வெள்ளம் வந்தபோதும், 2006-இல் சுனாமி வந்தபோதும் அவ்வூர் மக்களுக்கு சாரதா சமிதி சார்பில் சுவாமிஜி சங்கரானந்தர் ஆற்றிய பணி நினைவு கூறத் தக்கது.

  20. திருச்சி சாரதா சமிதியில் வசதியில்லாத பெண்களுக்காக இலவச டைப்ரைட்டிங், தையல் பயிற்சி வழங்கப்படுகிறது.

  21. சேலம் சாரதா சமிதியில் மகளிருக்கான முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் நடந்து வருகிறது.

  22. இராமேஸ்வரம் வரும் யாத்ரீகர்களுக்கு உணவும், தங்கும் வசதியும் இலவசமாக செய்து தரப்படுகிறது.

  23. திருப்பராய்த்துறை ஸ்ரீ தாருகாவனேஸ்வரர் கோயிலுக்கு 12 ஆண்டுகளுக்கு முன் தபோவனம் கும்பாபிஷேக விழாவை சிறப்பாகச் செய்தது. மீண்டும் இவ்வாண்டு கும்பாபிஷேகப் பணிகள் துவங்க உள்ளன.

  24. திருப்பராய்த்துறை கோயில் நித்ய வழிபாடுகளை தபோவனம் முறையாக நடத்தி வருகிறது.

  25. குந்துக்கால்: சுவாமி விவேகானந்தர் மேல்நாடுகளுக்குச் சென்று வெற்றிகரமாக தாய்நாடு திரும்பியபோது 26-1-1897இல் முதன் முதலில் காலடி வைத்த பாம்பன் - குந்துக்கால் என்ற இடத்தில் தபோவனமும், அரசும் இணைந்து விவேகானந்த நினைவாலயம் என்ற மணிமண்டபத்தை உருவாக்கி உள்ளது. மேலும் ராமேஸ்வரம் கோயில் முன்பு உள்ள விவேகானந்த பாஸ்கரம் நன்கு பராமரிக்கப்படுகிறது. வருகிற 2012 ஜனவரி 12-இல் விவேகானந்தருக்கும் 150-வது பிறந்தநாள் ஆகும்.


Website Maintained by: Old Students Association of Sri Ramakrishna Tapovanam